Wednesday, January 25, 2012

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நார்த்தம்பூண்டி - திருவண்ணாமலை மாவட்டம்.




நார்த்தம்பூண்டி
நாரதர் இலந்தை மரத்தினடியில் தவமிருந்து, ஈசனை வழிபட்ட திருத்தலம் தான் நார்த்தாம்பூண்டி. போளூர் - திருஅண்ணாமலை நெடுஞ்சாலையில் நாயுடுமங்கலம் கூட்டுரோட்டில் இறங்கி, மேற்கு நோக்கி 5 கி.மீ. பயணித்து இத்தலத்தை அடையலாம்.தக்கன் தனது மூன்று மகன்களையும், சிவனை விரும்பாதவர்களாகவே வளர்த்தான். ஆனால் நாரத முனிவரோ, அம்மூவருக்கும் சிவதீட்சை செய்து வைத்து, நல்வழிப்படுத்திவிட்டார். சினங்கொண்ட தக்கன், நாரத முனிவருக்கே சாபம் தந்துவிட்டான். தக்கனின் சாபத்தால் உருக்குலையத் துவங்கிய நாரத முனிவர், சேயாற்றின் தென்கரையில் உள்ள இத்திருத்தலத்தில், இலந்தை மரத்தினடியில் பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்து எம்பெருமானின் தரிசனமும், சாபவிமோதனமும் பெற்றார். "நாரதபூண்டி'யாகத் திகழ்ந்த ஊர் மருவி, நார்த்தாம்பூண்டி ஆகிவிட்டது.இத்தனை நாள் ராஜகோபுரம் இல்லாத குறை அன்பர் ஒருவரின் பெருமுயற்சியால் தீர்ந்து திருப்பணி செய்விக்கப்பட்டு குடமுழுக்கையும் கண்டுள்ளது நார்த்தாம்பூண்டி.

கொத்தளத்து விநாயகர் திருமதிலையொட்டி வெளிப்புறம் மேற்கில் அமைந்துள்ளது கொத்தளத்து விநாயகர் சன்னதி. நார்த்தம்பூண்டி பகுதியை ஆண்டுவந்த மன்னன் ஒருவன். போருக்குச் செல்லும்போது, தனது கோட்டை, கொத்தளங்களைக் காத்திடுமாறு விநாயகரை வணங்கிடுவானாம்.ஒருசமயம், ஈசன் தனது மைந்தன் ஆனைமுகனையே தளபதியாகக் கொண்ட யானைப்படையை அவனுக்குத் துணையாக அனுப்பி வெற்றி ஈட்டித் தந்ததால் கொத்தளத்து விநாயகருக்கு தனிச் சன்னதி எழுப்பி மகிழ்ந்தான்.மகாமண்டபம், இருபத்தாறு கற்தூண்கள் தாங்கி நிற்கும் அழகிய மண்டபம். அதனையடுத்து ஆறுகால் மண்டபத்தில் "கனகசபை' அமைந்துள்ளது. அடுத்து அர்த்தமண்டபமும், மூலவர் கருவறையும் உள்ளன. நாரதருக்கு அருள்பாலித்த கைலாசநாதர், உயர்ந்த பாணமாக சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மகாமண்டபத்தின் உள்காற்றில் விநாயகர், நால்வர், சப்தமாதர், முருகன் சன்னதிகள் உள்ளன.மூலவரின் வடக்கே, பெரிய நாயகி கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் நான்கு கரங்களோடு, அபய வரத முத்திரையோடு காட்சி தருகிறாள்.கோஷ்ட தேவதைகள் அனைத்தும், சிறிய விமானங் கொண்ட சன்னதிகளில் எழுந்தருளியுள்ளதும் தனிச்சிறப்பு. திருஅண்ணாமலையைப் போல, இங்கும் வேணுகோபால சுவாமி எழுந்தருளியிருப்பதும், நார்த்தாம் பூண்டிக்குப் பெருமை சேர்ப்பதாகும். ஆறுமுகப்பெருமானும், வள்ளி-தெய்வானையுடன் சன்னதி கொண்டுள்ளார்.









நாரதர் தவமிருந்த இலந்தை மரம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தழைத்து நிற்கும் இலந்தை மரமே இங்கு தலமரம் ஆகும். நாரத முனிவர் தவமிருக்க, தவம் செய்த விருட்சம் அல்லவா அது. சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதன் முன்னே நந்தியும், அருகில் கரங்கூப்பி அமர்ந்தபடி நாரத முனிவரையும் காண்கிறோம்.75 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறையும், அதன் பிறகு 1987லும் குடமுழுக்கு கண்ட கைலாசநாதர், இப்போதும் மீண்டும் புத்தொளி பெற்று, குடமுழுக்கு காண்பது, நார்த்தம்பூண்டி மக்கள் பெறும் அரிய பாக்கியம். அந்த முயற்சியில் உருவானதே தற்போது நாம் காணும் ஐந்து முயற்சியில் உருவானதே தற்போது நாம் காணும் ஐந்து நிலை ராஜகோபுரமும், விமானங்களுக்கு வண்ணப் பூச்சும்!